டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்த அணியின் வீரர் டேவிட் மில்லருடன் வீடியோ வெளியிட்ட இந்தியப் பெண்ணுக்குச் சமூக வலைதளங்களில் பாலியல் மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அகமதாபாத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியடைந்தது. இப்போட்டியில் தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர் 35 பந்துகளில் 63 ரன்கள் குவித்து வெற்றிக்குக் காரணமானார். போட்டிக்குப் பிறகு, பிரபல சமூக வலைதளவாசி ஆர்.ஜே. பிரின்சி பாரிக் என்பவர் மில்லருடன் ஒரு ஜாலியான வீடியோவை (Reel) வெளியிட்டிருந்தார். அதில், “நாம் நண்பர்கள் என்று நினைத்தேன் டேவிட்” என விளையாட்டாகக் குறிப்பிட்டிருந்தார்.
View this post on Instagram
இந்த வீடியோ வைரலான நிலையில், இந்திய அணியின் தோல்வியால் ஆத்திரமடைந்த சில ரசிகர்கள், பிரின்சி பாரிக்கிற்கு பாலியல் மிரட்டல் விடுத்ததுடன், அவரது உருவத்தையும் கேலி (Body Shaming) செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அந்த வீடியோவை நீக்கியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “எனக்கு விடுக்கப்பட்டுள்ள மிரட்டல்கள் தொடர்பாகக் காவல்துறையில் புகார் அளிக்க உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய அணியின் தோல்வியைத் தாங்க முடியாமல் ஒரு பெண் சமூக வலைதளவாசிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது விளையாட்டு ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
