டி20 கிரிக்கெட் போட்டிகளில் ரன் மழை பொழிவது தற்போது சாதாரணமாகிவிட்ட நிலையில், இங்கிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் கிளப் கிரிக்கெட் போட்டியில் பேட்ஸ்மேன்கள் நிகழ்த்திய அதிரடி ஆட்டம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பிரீமியர் ஒன் டாப் டயர் டிவிஷன் போட்டியில் டம்பிள்டன் கிரிக்கெட் கிளப் மற்றும் ஹெர்டாலி ரீடிங்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த டம்பிள்டன் அணி, 20 ஓவர்கள் முடிவில் வெறும் 2 விக்கெட் இழப்பிற்கு 417 ரன்கள் குவித்து புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. அந்த இன்னிங்ஸ் முழுவதும் 47 சிக்ஸர்களும் 22பவுண்டரிகளும் பறக்கவிடப்பட்டன.

டம்பிள்டன் அணியின் தொடக்க ஆட்டக்காரர் எவன் கேஜ், எதிரணி பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து வெறும் 55 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 23 சிக்சர்களுடன் 206 ரன்கள் குவித்து டி20 கிரிக்கெட்டில் அரிய இரட்டைச் சதத்தைப் பதிவு செய்தார். அவருக்கு இணையாக ஆடிய டேனி ஹாலண்ட் 37 பந்துகளில் 122 ரன்கள் விளாசினார்.

தொடர்ந்து 418 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய ஹெர்டாலி ரீடிங்ஸ் அணியில், ப்ளூம்ஃபீல்ட் 48 பந்துகளில் 109 ரன்கள் எடுத்துப் போராடிய போதிலும், அந்த அணி 229ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் மூலம் டம்பிள்டன் கிரிக்கெட் கிளப் 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சர்வதேச டி20 போட்டிகளில் ஜிம்பாப்வே அணி காம்பியாவுக்கு எதிராக எடுத்த 344 ரன்களே தற்போதைய அதிகபட்ச ஸ்கோராக இருக்கும் வேளையில், இந்த உள்ளூர் போட்டியின் ரன் குவிப்பு சர்வதேச கிரிக்கெட் அரங்கில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியது.