ஆப்கானிஸ்தானின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான், 2025 ஆம் ஆண்டு தி ஹண்ட்ரட் தொடரின் தொடக்கப் போட்டியிலேயே வரலாறு படைத்துள்ளார். ஓவல் இன்வின்சிபிள்ஸ் அணிக்காக விளையாடிய அவர், லண்டன் ஸ்பிரிட் அணிக்கு எதிரான போட்டியில், டி20 கிரிக்கெட்டில் 650 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். போட்டியில் அவர் 20 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்தப் போட்டியில், ரஷீத் கானின் அபார பந்து வீச்சால், லண்டன் ஸ்பிரிட் அணி 80 ரன்கள் என்ற குறைந்த ஸ்கோருக்குள் சுருண்டது. அவர் வீழ்த்திய விக்கெட்டுகளில் வெய்ன் மேட்சன், லியாம் டாசன் மற்றும் ரியான் ஹிக்கின்ஸ் இருந்தனர். குறிப்பாக லியாம் டாசன் விக்கெட்டை வீழ்த்தியதுதான், அவருடைய 650வது விக்கெட் என்ற பெருமைக்குரியது. இதுவரை ரஷீத் கான் 478 இன்னிங்ஸ்களில் 651 விக்கெட்டுகளை 18.54 சராசரியுடன் வீழ்த்தியுள்ளார்.
இந்த சாதனைக்குப் பிறகு, ஓவல் இன்வின்சிபிள்ஸ் அணி மிக எளிதாக இந்த போட்டியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. வீரர் வில் ஜாக்ஸ் 24 ரன்கள் எடுத்தார். ரஷீத் கானைத் தவிர, சாம் கரன் 3 விக்கெட்டுகள், ஜோர்டன் கிளார்க் 2 விக்கெட்டுகள் வீழ்த்தி சிறப்பித்தனர். லண்டன் ஸ்பிரிட் அணிக்காக லியாம் டாசன் மட்டும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், மற்றவர்கள் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.
தன்னுடைய சர்வதேச புள்ளிவிவரங்களிலும் ரஷீத் கான் சிறந்து விளங்கியுள்ளார். அவர் 96 டி20 போட்டிகளில் 161 விக்கெட்டுகள் (13.80 AVG), 114 ஒருநாள் போட்டிகளில் 199 விக்கெட்டுகள் (20.40 AVG), மேலும் 6 டெஸ்ட் போட்டிகளில் 45 விக்கெட்டுகள் (20.44 AVG) வீழ்த்தியுள்ளார். அவரது இந்த சாதனை உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
