இந்தியா மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடந்து வரும் டி20 உலகக்கோப்பை 2026 தொடரில், மேட்ச் பிக்சிங் எனப்படும் ஆட்ட நிர்ணயப் புகார் கிளம்பியுள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டு புலனாய்வு நிறுவனம் வெளியிட்ட ‘ஊழல், குற்றம் மற்றும் கிரிக்கெட்’ என்ற ஆவணப்படம் இந்த விவகாரத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

குறிப்பாக, சென்னையில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், கனடா கேப்டன் தில்ப்ரீத் பஜ்வா வீசிய 5-வது ஓவர் தான் இப்போது சந்தேக வளையத்தில் உள்ளது. அந்த ஓவரில் நோ-பால் மற்றும் வைடு வீசி 15 ரன்களை அவர் வாரி வழங்கியது தற்செயலானது அல்ல எனச் சொல்லப்படுகிறது.

இதுமட்டுமன்றி, கனடா அணியின் முன்னாள் பயிற்சியாளர்கள் குர்ரம் சோஹன் மற்றும் புது தசநாயக்க ஆகியோர், குறிப்பிட்ட வீரர்களை அணியில் சேர்க்கச் சொல்லி வாரிய உறுப்பினர்கள் தங்களை மிரட்டியதாகப் புகார்களை அடுக்கிக் கொண்டு போகிறார்கள்.

இந்த விவகாரம் குறித்து ஐசிசி-யின் ஊழல் தடுப்புப் பிரிவு (ACU) தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது. ஒருவேளை இந்தப் புகார் உறுதியானால், கனடா கிரிக்கெட் அணி மிகப்பெரிய தடையைச் சந்திக்க நேரிடும் எனத் தெரிகிறது.