நடப்பு ஐபிஎல் 2026 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் காட்டி வரும் அதிரடி ஆட்டம், இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழுவுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று வான்கடே மைதானத்தில் நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், 196 ரன்கள் என்ற இமாலய இலக்கை வெறும் 16.3 ஓவர்களிலேயே பஞ்சாப் கிங்ஸ் எட்டிப்பிடித்து மாஸ் காட்டியது. அதிரடியாக ஆடிய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 35 பந்துகளில் 66 ரன்கள் விளாசி ஹாட்ரிக் அரைசதம் அடித்து அசத்தினார்.
இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஷ்ரேயாஸின் இந்த ‘வெறித்தனமான’ பார்ம் குறித்துப் பேசியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், “ஷ்ரேயாஸ் ஐயரைத் தொடர்ந்து அலட்சியம் செய்வது இந்திய அணிக்குத்தான் இழப்பு;
அவரைத் தலைமைப் பொறுப்பிலும், டி20 அணியிலும் சேர்க்காவிட்டால் அது தேர்வுக்குழுவின் தோல்வி” என அஜித் அகார்க்கருக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
26.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஷ்ரேயாஸ், 11 வருடங்களுக்குப் பிறகு பஞ்சாப் அணியை கடந்த ஆண்டே இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற நிலையில், இந்த ஆண்டும் கோப்பையை வெல்லும் முனைப்பில் இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
