தளவாட நெரிசல் மிகுந்த பெங்களூரு சாலைகளில் சிறுவன் ஒருவன் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து விதிகளை துளியும் மதிக்காமல், மற்ற வாகனங்களுக்கு இடையே அந்த சிறுவன் ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்கியது சாலைப் பாதுகாப்பு குறித்தப் பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
மேலும் போதிய முதிர்ச்சியும் உரிமமும் இல்லாத சிறுவர்கள் இதுபோன்று வாகனங்களை இயக்குவது அவர்களது உயிருக்கு மட்டுமின்றி, சாலையில் செல்லும் மற்றவர்களின் பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைகிறது எனச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பெங்களூரு போக்குவரத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மைனர் சிறுவன் வாகனத்தை ஓட்ட அனுமதித்ததற்காக அந்த வாகனத்தின் உரிமையாளர் அல்லது சிறுவனின் பெற்றோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் “சிறுவர்கள் கையில் வாகனங்களைக் கொடுப்பது சட்டப்படி குற்றம்” என்று எச்சரித்துள்ள அதிகாரிகள், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும் என்றும், இது போன்ற பொறுப்பற்ற செயல்கள் விபத்துக்களுக்கு வழிவகுக்கும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
