ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான 40 நாள் போர் நிறுத்தப்பட்ட பின்னரும், இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் நீடித்து வருகிறது. முக்கியமாக, கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு மிக அவசியமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் உலகளவில் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதுவரை ஈரானை நிபந்தனையின்றி சரணடையச் சொல்வோம் என்றும், அந்த ஆட்சியை கவிழ்ப்போம் என்றும் அதிரடியாகப் பேசி வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தற்போது திடீரென ஈரானுக்கு ஒரு புதிய போர் நிறுத்த முன்மொழிவை அனுப்பியுள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க வேண்டும் மற்றும் போரை முழுமையாக நிறுத்த வேண்டும் என்ற இரண்டு நிபந்தனைகளை அமெரிக்கா இதில் முன்வைத்துள்ளது.
அமெரிக்காவின் இந்த திடீர் மென்மையான போக்கு, டொனால்ட் டிரம்ப் ஈரானிடம் சரணடைந்து விட்டாரா என்ற விவாதத்தை உலக அரங்கில் கிளப்பியுள்ளது. நாங்கள் ஈரானை மண்டியிடச் செய்துவிட்டோம் என்று ஒருபுறம் டிரம்ப் கூறினாலும், மறுபுறம் ஒப்பந்தம் செய்யத் தூது விடுவது அமெரிக்காவின் பலவீனத்தைக் காட்டுவதாக விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இந்த முன்மொழிவுக்குப் பதிலளிக்க ஈரானுக்கு அமெரிக்கா 48 மணிநேரம் அவகாசம் அளித்துள்ளது. ஈரான் எடுக்கும் முடிவைப் பொறுத்தே ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படுவதும், உலகளாவிய எரிபொருள் விநியோகம் சீராவதும் அமையும் என்பதால் அடுத்த 48 மணி நேரத்தை உலகம் முழுவதும் பதற்றத்துடன் கவனித்து வருகிறது.
