மத்திய கிழக்கில் ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் நீடித்து வரும் வேளையில், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அமெரிக்காவிற்குப் புதிய டிஜிட்டல் தலைவலியை ஏற்படுத்தியுள்ளார்.

வட கொரிய ஹேக்கர்கள் அமெரிக்காவின் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் பயன்படுத்தும் ஆக்சியோஸ் (Axios) எனப்படும் மென்பொருளின் விநியோகச் சங்கிலி (Supply Chain) மீது அதிரடி இணையத் தாக்குதலைத் தொடுத்துள்ளனர். வெறும் மூன்று மணி நேரத்தில் மென்பொருள் கட்டமைப்பிற்குள் புகுந்த ஹேக்கர்கள், அதில் தீங்கிழைக்கும் குறியீடுகளைச் செருகி நிதி, சுகாதாரம் மற்றும் கிரிப்டோகரன்சி துறைகளை நிலைகுலையச் செய்துள்ளனர்.

இந்தத் தாக்குதல் மூலம் பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள கிரிப்டோகரன்சியைத் திருடி, வட கொரியாவின் அணு ஆயுதத் திட்டங்களுக்கு நிதியளிக்க கிம் ஜாங் உன் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே ஈரான் மற்றும் சீனாவால் பெரும் சவால்களைச் சந்தித்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு, வட கொரியாவின் இந்த டிஜிட்டல் போர் முறை தூக்கமில்லாத இரவுகளைப் பரிசளித்துள்ளது. குறிப்பாக, அமெரிக்காவின் பெருநிறுவனங்கள் தற்காப்பு நடவடிக்கைகள் இன்றி செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி மென்பொருள்களை உருவாக்குவது ஹேக்கர்களுக்குச் சாதகமாக அமைந்துவிட்டது என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

மாண்டியன்ட் (Mandiant) பாதுகாப்பு அமைப்பின் கூற்றுப்படி, இந்த சைபர் தாக்குதலின் முழுமையான பாதிப்புகளைக் கண்டறிய இன்னும் பல மாதங்கள் ஆகலாம் எனக் கூறப்படுகிறது. ஒருபுறம் போர்க்களத்தில் ஏவுகணைகளைச் சமாளிக்கும் டிரம்ப், மறுபுறம் கண்ணுக்குத் தெரியாத இந்த டிஜிட்டல் தாக்குதலால் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறார்.