ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குவது அல்லது அங்கு அமெரிக்க ராணுவத்தை அனுப்புவது குறித்த கேள்விக்கு, “தற்போது எங்கும் ராணுவத்தை அனுப்பும் திட்டம் இல்லை” என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “நான் எங்கும் ராணுவத்தை நிலைநிறுத்தப் போவதில்லை. அப்படியே நான் ஏதாவது செய்யத் திட்டமிட்டிருந்தாலும், அதை யாரிடமும் முன்கூட்டியே சொல்லமாட்டேன். மக்கள் பலவிதமாகக் கணிக்கிறார்கள், ஆனால் உண்மை பெரும்பாலும் வேறாகவே இருக்கும்,” எனத் தனது வழக்கமான பாணியில் பதிலளித்தார்.
தனது ஆட்சியில் அமெரிக்கப் பொருளாதாரம் அடைந்துள்ள வளர்ச்சியைப் பெருமிதத்துடன் குறிப்பிட்ட ட்ரம்ப், “டோவ் ஜோன்ஸ் குறியீடு 50,000 புள்ளிகளைக் கடக்கும் என நான் சொன்னபோது, என் பதவிக்காலத்தில் அது நடக்காது என்றார்கள். ஆனால், ஒரே ஆண்டில் அந்த மைல்கல்லை எட்டிப் பிடித்தோம்.” “S&P 500 குறியீடு 7,000 புள்ளிகளைக் கடந்திருப்பது மிகப்பெரிய வெற்றி. எங்களது பொருளாதாரக் கொள்கைகளால் மட்டுமே இது சாத்தியமானது,” என்றார்.
ஈரான் தலைமை ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது எனச் சாடிய ட்ரம்ப், ஈரான் உலகிற்கும், குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறினார். ஈரானின் தற்போதைய மோசமான நிலையைத் தான் முன்னரே கவனித்ததாகவும், அதனால்தான் அமைதியாக இருக்க விரும்பவில்லை என்றும் அவர் விளக்கினார்.
ஜப்பான் குறித்துப் பேசுகையில், “ஜப்பானுக்குத் தேவையான 90 சதவீத கச்சா எண்ணெய் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் செல்கிறது. தற்போது அதற்கு அமெரிக்கா பாதுகாப்பு அளித்து வருகிறது. இனி ஜப்பான் கூடுதல் பொறுப்பை ஏற்றுச் செயல்பட வேண்டும்,” என வலியுறுத்தினார்.
மேலும், நேட்டோ (NATO) நாடுகள் உதவி செய்ய முன்வருவது காலம் கடந்த செயல் என்றும், பிரிட்டன் தனது விமானம் தாங்கி போர்க்கப்பலை அனுப்ப எடுத்த முடிவு, போர் முடிவுக்கு வந்த பிறகு எடுக்கும் தேவையற்ற நடவடிக்கை என்றும் அவர் விமர்சித்தார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம், ஈரானின் எண்ணெய் மற்றும் எரிசக்தி நிலையங்களைக் குறிவைத்துத் தாக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் இச்சந்திப்பில் தெரியவந்துள்ளது. ட்ரம்ப்பின் இந்த அதிரடி கருத்துகளுக்கு ஈரான் என்ன பதில் அளிக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு உலக அரங்கில் எழுந்துள்ளது.
