இந்தியா மற்றும் ஈரான் இடையிலான நீண்டகால ராஜதந்திர உறவைக் கெடுக்கும் நோக்கில், பாகிஸ்தானைச் சேர்ந்த அமைப்புகள் ஒருங்கிணைந்த முறையில் பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு வருவது ஆய்வில் அம்பலமாகியுள்ளது.

கடந்த மார்ச் 4-ம் தேதி, இலங்கை கடற்பரப்புக்கு அருகே ஈரானின் ‘ஐஆர்ஐஎஸ் தேனா’ (IRIS Dena) என்ற போர்க்கப்பலை அமெரிக்கப் படைகள் தாக்கி அழித்தன. சர்வதேச கடல் பகுதியில் ஈரானியக் கப்பல்களுக்குப் பாதுகாப்பில்லை என்பதைக் காட்டும் வகையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் பீட் ஹெக்செத் தெரிவித்திருந்தார்.

இந்தச் சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே, சமூக வலைதளங்களில் #IndiaBetraysIran (இந்தியா ஈரானைக் காட்டிக்கொடுத்தது) என்ற ஹேஷ்டேக் வைரலானது. ஈரானியக் கப்பல் இருக்கும் இடத்தை இந்தியாதான் அமெரிக்காவிற்கு ரகசியமாகத் தெரிவித்தது என்ற முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு திட்டமிட்டுப் பரப்பப்பட்டது.

இந்தியப் புலனாய்வு அமைப்புகள் மற்றும் ‘ஓசிண்ட்’ (OSINT) குழுக்கள் நடத்திய ஆய்வில், இந்தப் பொய்ப் பிரசாரம் பாகிஸ்தானிலிருந்து உருவானது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது கடந்த மார்ச் 4 அன்று, அடிக்கடி பெயரை மாற்றிக்கொண்டே இருக்கும் ‘@TacticalTribun’ என்ற கணக்கிலிருந்து இந்த வதந்தி கிளப்பப்பட்டது. இந்தப் பதிவுகளைப் பகிர்ந்தவர்களில் சுமார் 40 சதவீதம் பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். ஈரான் ஆதரவு குழுக்கள், சில ஆப்பிரிக்க மற்றும் தென்கிழக்கு ஆசியக் கணக்குகளும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. 100-க்கும் மேற்பட்ட கணக்குகள் மூலம் சுமார் 50,000 முதல் 1 லட்சம் பேருக்கு இந்தத் தவறான தகவல் சென்றடைந்தது. சில பதிவுகள் 9 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளன.

இந்தச் சதித்திட்டம் இத்துடன் நிற்கவில்லை. பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ (ISI) ஆதரவு பெற்ற அமைப்புகள் அதிநவீன ‘டீப் ஃபேக்’ (Deepfake) தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தியுள்ளன: மார்ச் 3 அன்று, இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலை ஆதரிப்பது போன்ற ஒரு போலி வீடியோ வெளியிடப்பட்டது. அதேபோல், ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியைப் படுகொலை செய்ய பிரதமர் மோடி ஆதரவு அளிப்பதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறுவது போன்ற பழைய வீடியோ ஒன்றும் எடிட் செய்யப்பட்டுப் பரப்பப்பட்டது.

மேலும் மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம்  மற்றும் பல்வேறு உண்மைச் சரிபார்ப்பு குழுக்கள் இவை அனைத்தும் பாகிஸ்தானால் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள் என்பதை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளன. இந்தியா – ஈரான் இடையிலான நல்லுறவைச் சிதைத்து, இஸ்லாமிய நாடுகளிடையே இந்தியாவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதே பாகிஸ்தானின் நோக்கம் எனப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.