அமெரிக்கக் குடிமக்களைத் திருமணம் செய்து கொள்வதன் மூலம் எளிதாகப் பெறப்பட்டு வந்த ‘கிரீன் கார்டு’ நடைமுறையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

இனி அமெரிக்கக் குடிமகனைத் திருமணம் செய்துகொள்வது மட்டுமே நிரந்தரக் குடியுரிமைக்கு (கிரீன் கார்டு) உத்தரவாதம் அளிக்காது என்றும், தம்பதியினர் இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசிப்பது இனி கட்டாயமாக்கப்படுவதாகவும் அமெரிக்கக் குடிவரவுத் துறை அறிவித்துள்ளது.

முன்னதாக, வேலை அல்லது படிப்பு காரணமாகத் தம்பதியினர் வெவ்வேறு இடங்களில் வசிப்பதாகக் கூறும் காரணங்கள் ஏற்கப்பட்டு வந்த நிலையில், புதிய விதிகளின்படி அத்தகைய விளக்கங்கள் நிராகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையான திருமண உறவை உறுதிப்படுத்தவும், குடியுரிமைக்காக மட்டுமே செய்யப்படும் போலி திருமணங்களைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.

டிரம்ப் நிர்வாகத்தின் இந்த அதிரடி மாற்றத்தால், திருமண அடிப்படையில் கிரீன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் இனி தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்கள் மட்டுமன்றி, அவர்களின் தினசரி வாழ்க்கை முறை மற்றும் ஒரே வீட்டில் வசிப்பதற்கான ஆதாரங்கள் குறித்துக் குடிவரவு அதிகாரிகள் நேரடி விசாரணையில் ஈடுபடுவார்கள்.

தம்பதியினர் ஒன்றாக வசிக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் என்றும், பிரிந்து வாழும் தம்பதிகளின் திருமண உறவு சந்தேகத்திற்குரியதாகக் கருதப்பட்டு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் குடியேற விரும்புவோருக்கு இக்கட்டுப்பாடுகள் பெரும் சவாலாக மாறியுள்ள நிலையில், முறையான திருமண பந்தத்தில் இருப்பவர்கள் மட்டுமே இனி கிரீன் கார்டு பெற முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது.