அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளராகப் பணியாற்றி வந்த எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டார்.
இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்சியின் கொள்கைகளுக்கும் குறிக்கோள்களுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி அவப்பெயரும் களங்கமும் உண்டாகும் விதத்தில் நடந்து கொண்டதாலும் மாணிக்கராஜா நீக்கப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் அமமுக-வின் முக்கியத் தூணாகவும், டி.டி.வி. தினகரனின் நம்பிக்கைக்குரிய தளபதியாகவும் கருதப்பட்ட மாணிக்கராஜாவின் இந்த நீக்கம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக இணைந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவர் விரைவில் திமுக-வில் இணையக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கட்சித் தொண்டர்கள் யாரும் அவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் தலைமை அறிவுறுத்தியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தென் மண்டலத்தின் செல்வாக்கு மிக்க நிர்வாகி நீக்கப்பட்டிருப்பது அமமுக-வின் தேர்தல் வியூகங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
