உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில், திருமண ஊர்வலத்தில் ஒலிக்கப்பட்ட அதிகப்படியான டிஜே சத்தத்தால் சுமார் 140 கோழிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 25-ம் தேதி இரவு, சபிர் அலி என்பவருக்குச் சொந்தமான கோழிப்பண்ணை வழியாகச் சென்ற திருமண ஊர்வலத்தில், அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிக சத்தத்துடன் இசை ஒலிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த அதீத சத்தத்தைக் கேட்டு மிரட்சியடைந்த கோழிகள், அடுத்த சில மணி நேரங்களிலேயே பண்ணைக்குள்ளேயே சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளன.

​இதுகுறித்து பண்ணை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், டிஜே ஆப்பரேட்டர் கவி யாதவ் என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நிபுணர்களின் கருத்துப்படி, அதிகப்படியான சத்தம் பறவைகள் மற்றும் விலங்குகளுக்குத் தீவிர மன அழுத்தத்தை ஏற்படுத்தி, இதய செயலிழப்புக்கு (Cardiac Arrest) வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது கோழிகளின் மரணத்திற்கு அந்த டிஜே சத்தம் தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் நோய்த்தொற்றுகள் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.