அமெரிக்கா தனது சுயநலத்திற்காகப் பாகிஸ்தானைப் பயன்படுத்திக் கொண்டு, அதன் தேவை முடிந்தவுடன் ஒரு ‘கழிவறை காகிதத்தைப்’ போலத் தூக்கி எறிந்துவிட்டதாகப் பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த காலங்களில் ஆப்கானிஸ்தான் போர்களில் அமெரிக்காவுடன் கைகோர்த்தது பாகிஸ்தான் செய்த மிகப்பெரிய தவறு என்று ஒப்புக்கொண்ட அவர், அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாகக் குறிப்பிட்டார்.

இந்நிலையில் பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்கள் ஜியா-உல்-ஹக் மற்றும் முஷாரப் ஆகியோர் இஸ்லாமிய நலன்களுக்காகப் போராடாமல், ஒரு அதிகாரமிக்க நாட்டைத்  திருப்திப்படுத்துவதற்காகவே போர்களில் பங்கேற்றனர் என்று அமைச்சர் குற்றம் சாட்டினார்.

இதன் விளைவாகவே பாகிஸ்தான் இன்று பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கித் தவிப்பதாகவும், கடந்த காலத் தவறுகளால் ஏற்பட்ட இந்த இழப்புகளை ஒருபோதும் ஈடுசெய்ய முடியாது என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்தார். பாகிஸ்தான் வரலாற்றிலும் கல்வி முறையிலும் இந்தத் தவறுகள் ஆழமாகப் பதிந்துள்ளதாகவும், இதிலிருந்து மீள்வது கடினம் என்றும் அவர் தனது உரையில் எச்சரித்துள்ளார்.