அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வரும் கிறிஸ் ஹாரிசன் என்பவர், தனது மகள் லூசி ஹாரிசனுடன் டிரம்ப் மற்றும் துப்பாக்கி கலாச்சாரம் குறித்து விவாதித்தபோது ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் இருந்து தனது காதலருடன் தந்தையை காண வந்த லூசி, டிரம்ப் குறித்த விவாதத்தின்போது ஒரு பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டால் என்ன செய்வீர்கள் என தந்தையிடம் கேட்டுள்ளார். அதற்கு கிறிஸ் ஹாரிசன், தனக்கு இன்னும் இரண்டு மகள்கள் இருப்பதால் அது பற்றி கவலையில்லை என அலட்சியமாகப் பதிலளித்துள்ளார்.
இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த லூசி அந்த இடத்தை விட்டு வெளியேறிய நிலையில், சிறிது நேரத்தில் தந்தை அவரை படுக்கையறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்ற சில விநாடிகளிலேயே துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. காதலர் சாம் ஓடிச் சென்று பார்த்தபோது லூசி ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்துள்ளார்.
இது குறித்து நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணையில், மது அருந்தியிருந்த கிறிஸ் ஹாரிசன், தற்செயலாகத் துப்பாக்கி வெடித்ததா அல்லது தெரியாமல் கை பட்டதா எனத் தெரியவில்லை என முன்னுக்குப் பின் முரணாகத் தெரிவித்துள்ளார். எனினும், ஆத்திரத்தில் மகளைக் கொன்றுவிட்டதாக அவரே புலம்பியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
டிரம்ப் மீதான ஆதரவு மற்றும் துப்பாக்கி தொடர்பான வாக்குவாதம் ஒரு தந்தையையே மகளைக் கொல்லும் அளவிற்கு கொண்டு சென்றது உலகெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
