இங்கிலாந்தின் கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியைச் சேர்ந்த 36 வயதான சாலி மோஸ் என்ற பியூட்டிஷியன் (Beautician), தனது 18 வயதில் மணிக்கட்டில் ஒரு சிறிய பூ வடிவில் டாட்டூ குத்தத் தொடங்கினார். அதுவே நாளடைவில் ஒரு பழக்கமாக மாறி, தனது கை, கால், மார்பு என உடல் முழுவதும் டாட்டூக்களால் நிரப்பினார். உடலில் இடம் இல்லாததால் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது முகத்திலும் டாட்டூ குத்தத் தொடங்கிய சாலி, தனது புருவத்திற்கு மேலே ‘தந்தை என்றும் நிரந்தரம்’ என்று ஸ்பானிஷ் மொழியில் தனது மறைந்த தந்தைக்காகப் பச்சைக் குத்தியுள்ளார். ஆனால், அவரது இந்தத் தோற்றத்தைப் பார்க்கும் பல ஆண்கள், அவரை ஒரு தவறான பெண்ணாகவே சித்தரிப்பதோடு, இணையவாசிகள் சிலர் அவரை “சாத்தானை கும்பிடுபவள்” என்றும் மிக மோசமாக விமரிசித்து வருகின்றனர்.

இதுகுறித்து சாலி மோஸ் கூறும்போது, டாட்டூ குத்துவது தனக்கு ஒரு போதை போல மாறிவிட்டதாகவும், ஒவ்வொரு மாதமும் புதிய டாட்டூக்களைக் குத்தி வருவதாகவும் தெரிவித்தார். ஆரம்பத்தில் இணையத்தில் வந்த எதிர்மறை கமெண்ட்டுகள் தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும், ஆனால் இப்போது அதை நினைத்துத் தான் சிரிப்பதாகவும் கூறினார். மேலும், தன்னை நேரில் பார்த்தால் எதுவும் பேசத் துணியாத ‘கீபோர்டு வாரியர்ஸ்’ (Keyboard Warriors) தான் ஆன்லைனில் தன்னை ‘ஒரு அசிங்கம்’ என்று வம்பிழுப்பதாகக் குறிப்பிட்ட சாலி, தற்போது தனக்குத் தடிமனான தோல் உருவாகிவிட்டதால், பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டே அவர்களின் கமெண்ட்டுகளைப் படித்துப் பொழுதுபோக்குவதாகக் கூலாகத் தெரிவித்துள்ளார்.
