மகாராஷ்டிர மாநிலம் டோம்பிவிலியில் நிலத்தின் உரிமை தொடர்பாக நீண்டகாலமாக இருந்து வந்த பிரச்னை தற்போது மோதலாக மாறியுள்ளது. காவல் நிலைய பகுதியில் இந்தச் சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலத்தின் உரிமை தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே ஏற்கெனவே கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில், அங்கு கட்டுமானப் பணிகள் தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ள முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது. இதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் திடீரென பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் மக்கள் கூறுகையில், கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் பாதுகாவலர்களுடன் அங்கு வந்து, ஜேசிபி இயந்திரம் மூலம் அங்கிருந்த சில வீடுகளை அகற்ற முயன்றதாக குற்றம்சாட்டியுள்ளனர். இதைத் தடுக்க பொதுமக்கள் ஜேசிபி முன்பு திரண்டதாக கூறப்படுகிறது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, பின்னர் கைகலப்பாக மாறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதலில் ஆறு பேர் காயமடைந்ததாக உள்ளூர் தரப்பினர் கூறியுள்ளனர். சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

 

இந்தச் சம்பவம் தொடர்பான பல காணொளிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. அதில் சிலர் ஜேசிபி இயந்திரத்தின் முன்பாக நின்று அதைத் தடுக்க முயற்சிப்பதும், சிலர் இயந்திரத்தின் மீது ஏறி நிற்பதும் பதிவாகியுள்ளது. மற்றொரு காணொளியில் பெண் ஒருவர் ஜேசிபி நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் காணப்படுகிறது. நிலத்தின் ஆவணங்கள் மற்றும் உரிமை தொடர்பாகவே இந்தப் பிரச்னை ஏற்பட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். விவகாரம் தொடர்பான காணொளிகள் வைரலானதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதனிடையே, உள்ளூர் மக்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த ராமேஸ்வர் குப்தா மறுத்துள்ளார். சம்பந்தப்பட்ட நிலத்தை சட்டப்பூர்வ நடைமுறையின்படி வாங்கியதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், அந்த நிலத்தை ஆய்வு செய்தபோது அங்கு சுமார் 60 அறைகள் இருந்ததாகவும், அவற்றை விற்பனை செய்தது தொடர்பாக தனியாகப் பிரச்னை இருப்பதாகவும் கூறியுள்ளார். தற்போது மான்பாடா போலீஸார் இரு தரப்பினரிடமும் இருந்து பெறப்பட்ட புகார்கள், நில ஆவணங்கள், சம்பவ காணொளிகள் மற்றும் அங்கிருந்தவர்களின் வாக்குமூலங்களை ஆய்வு செய்து வருகின்றனர். விசாரணை முடிந்த பின்னரே நில உரிமை தொடர்பான விவகாரத்தின் முழுமையான பின்னணி தெரியவரும்.