மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில், 8வது ஊதியக் குழு தனது ஆலோசனைப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஊழியர் சங்கங்களுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான இந்த ஆணையம், ஊழியர்களின் கோரிக்கைகள் மற்றும் கருத்துகளை நேரடியாகக் கேட்டறிந்து வருகிறது. இதனால், புதிய ஊதிய மாற்றம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இதன்படி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. அதனைத் தொடர்ந்து சென்னையில் செப்டம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளிலும், புதுச்சேரியில் செப்டம்பர் 9-ஆம் தேதியும் கூட்டங்கள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சண்டிகரில் செப்டம்பர் 16 முதல் 18-ஆம் தேதி வரையும், பெங்களூருவில் அக்டோபர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளிலும் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இந்தக் கூட்டங்கள் மூலம் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகளை ஆணையம் பதிவு செய்ய உள்ளது.

இந்த ஆலோசனைகளில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மட்டுமின்றி, பல்வேறு படிகள், ஓய்வூதியம், குறைந்தபட்ச ஊதியம், பணிச்சூழல் மற்றும் பிற பணிநிபந்தனைகள் குறித்தும் கருத்துகள் கேட்கப்பட உள்ளன. குறிப்பாக ரயில்வே ஊழியர்களின் பணிச்சூழல் தொடர்பான தகவல்களைச் சேகரிக்கும் வகையில், மும்பையில் உள்ள மத்திய ரயில்வே மண்டலத்தின் கீழ் செயல்படும் ரயில்வே கோட்டங்களையும் 8வது ஊதியக் குழு பார்வையிட திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஊழியர்களின் நடைமுறை சிக்கல்கள் மற்றும் எதிர்பார்ப்புகளை நேரடியாக அறிந்து கொள்ள ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கிடையில், 8வது ஊதியக் குழுவில் ‘ஃபிட்மென்ட் ஃபாக்டர்’ தொடர்பான கோரிக்கையும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தற்போது 2.57 ஆக உள்ள ஃபிட்மென்ட் ஃபாக்டரை 3.83 அல்லது 4.0 ஆக உயர்த்த வேண்டும் என ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால், இதுகுறித்து இறுதி முடிவு எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனவே, ஊழியர்களின் கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளுக்குப் பிறகு 8வது ஊதியக் குழு என்ன பரிந்துரைகளை வழங்கும், மத்திய அரசு எத்தகைய முடிவை எடுக்கும் என்பதே தற்போது முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.