மீரட் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, சக இஸ்லாமியப் பயணிகளைப் பார்த்த ஒரு கும்பல் திடீரென ‘பாரத் மாதா கி ஜே’ மற்றும் ‘ஜெய் ஸ்ரீராம்’ ஆகிய முழக்கங்களை எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீரட் மற்றும் அதன் அருகிலுள்ள நிலையங்களுக்கு இடையே ரயில் சென்றுகொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட இந்த வீடியோ, தற்போது எக்ஸ் (X) உள்ளிட்ட சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

அமைதியாகச் சென்றுகொண்டிருந்த பயணத்தின் இடையே, திடீரென ஒரு தரப்பினர் எழுப்பிய இந்த முழக்கங்கள் மற்ற பயணிகளிடையே திகைப்பையும், சலசலப்பையும் உருவாக்கியது. ​இந்தச் சம்பவத்தின் நோக்கம் என்ன என்பது குறித்து இணையவாசிகள் மத்தியில் இருவேறு கருத்துக்கள் மோதி வருகின்றன. ஒரு தரப்பினர் இது மத ரீதியான சீண்டல் என்று குற்றம் சாட்ட, மற்றொரு தரப்பினர் தேசியவாத மற்றும் மத முழக்கங்களை எழுப்புவதில் என்ன தவறு இருக்கிறது எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பொதுப் போக்குவரத்துச் சாதனங்களில் இத்தகைய செயல்கள் மற்ற பயணிகளின் அமைதியைக் குலைக்கும் விதமாக இருப்பதாகப் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த வீடியோவை அடிப்படையாக வைத்து, பொது இடங்களில் தனி மனித சுதந்திரம் மற்றும் மத அடையாளங்கள் குறித்த விவாதங்கள் மீண்டும் சூடுபிடித்துள்ளன.