மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசி வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நாவடக்கம் தேவை என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “கருணாநிதி தனது கடைசி காலத்தில் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார்” என்று குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் எனது தந்தை மட்டுமல்ல, அவர் கோடிக்கணக்கான உடன்பிறப்புகளின் தலைவர். அவரைப் பற்றி எடப்பாடி பழனிசாமி பேசியுள்ள தரம் தாழ்ந்த விமர்சனங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அரசியல் நாகரிகம் கருதியே மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சிகிச்சை முறைகள் குறித்தோ, அவர்களது உடல்நிலை குறித்தோ நாங்கள் இதுவரை பொதுவெளியில் விமர்சித்தது இல்லை. ஆனால், கலைஞரின் கடைசி கால சிகிச்சை விவரங்கள் அனைத்தும் வெளிப்படையாக பொதுமக்கள் முன்னிலையிலேயே நடைபெற்றன.

எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர், மேலும் குறிப்பிட்டதாவது, கலைஞர் குறித்துப் பேசும்போது எடப்பாடி பழனிசாமி எல்லை மீறக்கூடாது. அவருக்கு நாவடக்கம் தேவை. கலைஞர் குறித்து இனியும் அவதூறாகப் பேசினால், ஒரு திமுக தொண்டனாக என்னால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது.

வரும் தேர்தல்களில் ஏற்படப்போகும் தோல்வி பயத்தின் காரணமாகவே, எடப்பாடி பழனிசாமி இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்ற அவதூறுகளைப் பரப்பி வருகிறார். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்