இந்தியாவில் உடல் பருமன் மற்றும் அதிக எடை கொண்டவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. 2050 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் 44.9 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் அதிக எடை கொண்டவர்களாக இருப்பார்கள் என சுகாதாரத் துறையின் ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
தற்போது நகர்ப்புறங்களில் வசிக்கும் ஒவ்வொரு 5 பேரில் ஒருவருக்கு உடல் பருமன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், குழந்தைகளில் கூட இந்தப் பிரச்சனை அதிகரித்து வருவதால், அரசு அதனை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி, நாக்பூர் எயிம்ஸ் உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு மருத்துவமனைகளிலும், அன்றாட உணவுகளில் உள்ள எண்ணெய் மற்றும் சர்க்கரை அளவுகள் குறித்த தகவல்களுடன் பலகைகள் வைக்கப்பட உள்ளன.
பொதுமக்கள் தினசரி உண்ணும் உணவுகளில் எவ்வளவு கொழுப்பு, சர்க்கரை இருக்கிறது என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் சமோசா மற்றும் ஜிலேபி போன்ற சிற்றுண்டிகள், உடலுக்கு தேவையில்லாத மற்றும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய உணவுகளாகக் கருதப்படுகின்றன. எனவே, சிகரெட்டுப் பெட்டியில் உள்ள எச்சரிக்கை வாசகம் போன்று, இவைகளின் பாக்கெட் லேபிளில் எச்சரிக்கை வாசகம் வைக்க மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக ஒரு செய்தி வெளிவந்தது.
ஆனால் இதனை தற்போது மத்திய சுகாதாரத்துறை மறுத்துள்ளது. அதாவது சமோசா மற்றும் ஜிலேபி போன்ற உணவுகளில் எந்தவிதமான எச்சரிக்கை வாசகமும் வைக்க மத்திய அரசு முடிவு செய்யவில்லை. மேலும் எண்ணெய் மற்றும் சர்க்கரை அளவு தொடர்பாகத்தான் எச்சரிக்கை வாசகம் வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
