கர்நாடகாவின் கோகர்ணா அருகே உள்ள ராம தீர்த்தா பகுதியில் உள்ள பாறைக்குகையிலிருந்து, ரஷ்யா நாட்டை சேர்ந்த நிநா குடினா மற்றும் அவரது மகள்கள் சமீபத்தில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பல்லி, விஷப்பாம்பு போன்ற ஆபத்தான உயிரினங்கள் வசிக்கும் இடத்தில் வசித்து வந்த இவர்களை, அதிகாரிகள் நகரத்திற்கு அழைத்துச் சென்றனர்.
காட்டில் வாழ்ந்த வாழ்க்கை தனக்கு மிக அமைதியானதும், நிறைவானதுமாக இருந்தது என நிநா குடினா தெரிவித்துள்ளார். பிரபல செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “நாங்கள் காட்டில் இயற்கையான முறையில் வாழ்வதில் பெரிய அனுபவம் பெற்றுள்ளோம்.
நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். நீர்வீழ்ச்சியில் நீந்தினோம், நிறைய இடம் தூங்குவதற்கும், களிமண்ணால் ஓவியங்கள் வரைந்தும், சுவையான உணவுகள் சமைத்தும் இருந்தோம். எங்களுக்கு தேவையான எல்லாம் அங்கே இருந்தது” என கூறியுள்ளார்.
நிநா மற்றும் அவரது மகள்கள், நிலச்சரிவுகள் மற்றும் விஷமுள்ள வன உயிரினங்களால் ஆபத்தான பகுதியாகக் கருதப்படும் ராமதீர்த்தா காட்டுப் பகுதியில் இயற்கை வாழ்வை அனுபவித்துக் கொண்டிருந்தனர்.
ஆனால், வனத்துறையினர் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவர்களை நகருக்கு அழைத்து வந்து, தற்போது கர்வார் மகளிர் நலவிழிப்புணர்வு மையத்தில் தங்க வைத்துள்ளனர்.
தற்போது நிநா குடினாவின் வீசா காலாவதி ஆகி இருப்பதால், தடுக்கப்பட்ட குடியிருப்பு மற்றும் நாடுகடத்தல் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. எனினும், “மனித சமுதாயம் வழங்கும் சீரற்ற வாழ்வை விட காட்டில் இருந்த வாழ்க்கையே எங்களுக்கு சமநிலை மற்றும் அமைதி அளித்தது” என நிநா குடினா உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம், இயற்கையோடு வாழ்க்கை நடத்தும் எதிர்மறை பிம்பங்கள் குறித்தும், தனிப்பட்ட சுதந்திர வாழ்வியல் தேர்வுகளுக்கான சமூக வரம்புகள் குறித்தும் பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.
