ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இலக்கிய விழாவில் கலந்து கொண்ட உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், டெல்லி கலவர வழக்கில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணையின்றி சிறையில் இருக்கும் உமர் காலித் குறித்து முக்கிய கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள ‘வாழும் உரிமை’ என்பது ஒரு நபர் விரைவான விசாரணையைப் பெறுவதையும் உள்ளடக்கியது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் நீண்ட காலத்திற்கு ஒருவரை விசாரணையின்றி சிறையில் வைப்பது என்பது அவருக்கு அளிக்கப்படும் தண்டனைக்குச் சமமானது என்று குறிப்பிட்ட அவர், ஒரு வழக்கில் விசாரணை விரைவாக நடைபெற வாய்ப்பில்லை என்றால், ஜாமீன் வழங்குவதே விதியாக இருக்க வேண்டும் என்றும், ஜாமீனை மறுப்பது விதிவிலக்காக மட்டுமே இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இது தொடர்ந்து பேசிய அவர், தேசிய பாதுகாப்பு என்ற காரணத்தை முன்னிறுத்தி ஜாமீனைத் தானாகவே மறுத்துவிட முடியாது என்றும், அந்த வழக்கில் உண்மையில் தேசிய பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் உள்ளனவா என்பதை நீதிமன்றங்கள் கவனமாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். உபா போன்ற கடுமையான சட்டங்கள் ஜாமீன் பெறுவதைக் கட்டுப்படுத்தினாலும், அவை அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை மீற முடியாது என அவர் தெளிவுபடுத்தினார்.

இந்நிலையில் தப்பிச் செல்வது அல்லது ஆதாரங்களைச் சிதைப்பது போன்ற குறிப்பிட்ட காரணங்கள் இல்லாத பட்சத்தில், நீண்ட கால சிறைவாசம் ஒருவரின் சுதந்திரத்தைப் பறிப்பதாக அமையும் என்றும், நீதிமன்றங்கள் பொதுமக்களின் திருப்திக்காகச் செயல்படாமல் அரசியலமைப்புச் சட்டத்தின் சமநிலையைப் பாதுகாப்பதையே கடமையாகக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.