மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கோவையில் இன்று தொடங்கியுள்ள நிலையில், கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்த நூர் முகமது என்பவர் கோவையின் தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படுகிறார். ஏனெனில் இவர் நாடாளுமன்றம், சட்டமன்றம் என எந்த தேர்தல் வந்தாலும் முதல் ஆளாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்வார். இந்த நிலையில் தான் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பமான தாக்கல் தொடங்கியதை தொடர்ந்து இன்று வேட்புமனு தாக்கல் செய்வதற்காக கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளார்..

அது மட்டுமில்லாமல் அவர் சவப்பெட்டியுடன் ஊர்வலமாக ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி வந்த நிலையில், போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அந்த பெட்டியை பறிமுதல் செய்தனர். இதையடுத்து ஆட்சியர் அலுவலகத்திற்குள் சென்ற அவர் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடுவதாக தேர்தல் அதிகாரியிடம் மனு தாக்கல் செய்தார்.

இதன்மூலம் இவர் 42வது முறையாக தேர்தலில் போட்டியிட  வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் இப்போது வரை பல்வேறு தேர்தல்களில் இவர் போட்டியிட்டு உள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, “நான் 42-வது முறையாக பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். ஜனநாயகம் செத்து விட்டது என்பதை உணர்த்துவதற்காகவே சவப்பெட்டியுடன் வந்தேன்” என தெரிவித்தார்.