நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைச் சட்டவிரோதமாக இணையதளங்கள் மற்றும் கேபிள் தொலைக்காட்சிகளில் வெளியிடச் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்ஷன்ஸ் (KVN Productions) தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சுமார் 10,000-க்கும் மேற்பட்ட இணையதளங்கள் மற்றும் உள்ளூர் கேபிள் சேனல்களில் இப்படம் சட்டவிரோதமாக வெளியாவதைத் தடுக்க இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மேலும், இந்தப் படத்தின் திருட்டுப் பதிப்புகளைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இணைய சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும் (ISPs) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே தணிக்கைச் சான்றிதழ் விவகாரத்தில் பல்வேறு சட்டப் போராட்டங்களைச் சந்தித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம், தற்போது திருட்டு வீடியோ பாதிப்பிலிருந்து தப்பிக்க நீதிமன்றத்தின் பாதுகாப்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
