ஐபிஎல் சாம்பியன்ஷிப்பை எம்எஸ் தோனிக்கு அர்ப்பணிக்கிறேன் என ஜடேஜா தெரிவித்துள்ளார்..

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்கிறது என்றால் அதற்கு ஜடேஜா தான் முக்கிய காரணம். கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜடேஜா ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து வெற்றியை வசப்படுத்தினார். இதன் மூலம் சிஎஸ்கேயின் எதிர்காலம் நான்தான் என்பதை தனது பேட்டிங் மூலம் அனைவருக்கும் புரிய வைத்தார் ஜடேஜா. வெற்றியை கொண்டாடும் போது கிரிக்கெட் வர்ணனையாளரிடம் பேசினார்.

அப்போது அவர் இது என் சொந்த மண். நான் குஜராத்தைச் சேர்ந்தவன். எனது சொந்த மண்ணில் எனது குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் விளையாடுவது ஒரு தனி உணர்வு. ரசிகர்களும் சமமாக ஆச்சரியப்பட்டனர். மழையையும் பொருட்படுத்தாமல் நேற்றைய போட்டியை எதிர்பார்த்தனர்.சிஎஸ்கே ரசிகர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுக்கான உங்கள் ஆதரவு நிச்சயமாக பாராட்டப்படும். இந்த வெற்றியை எங்கள் அணியில் உள்ள ஒரு சிறப்பு வீரருக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். அது வேற யாருமில்லை நம்ம தோனிதான்.

அணிக்காக வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. நான் பந்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன், என்னால் முடிந்தவரை வீச முயற்சித்தேன். நான் என்னை நம்பினேன், பந்தை நேராக சிக்ஸருக்கு அடிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஏனென்றால் மோகித் சர்மா மெதுவாக பந்து வீசுவார் என்பது எனக்குத் தெரியும். அதனால்தான் என்னால் அப்படி அடிக்க முடிந்தது’’ என்றார் ஜடேஜா.

இந்தப் போட்டியில் தோனி முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அப்படிப்பட்ட சூழ்நிலையில், போட்டியை முடிக்கும் பொறுப்பை வேறொருவர் ஏற்க வேண்டும், தோனியுடன் பத்தாண்டு காலம் விளையாடி தான் கற்றுக்கொண்டதை ஜடேஜா காட்டினார். வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஜடேஜா மைதானத்தில் ஓட பின் தல தோனி ஆனந்த கண்ணீருடன் ஜடேஜாவை தூக்கினார்.. இதனால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற இருந்தது. ஆனால், மே 28ஆம் தேதி மழை பெய்த காரணத்தால் போட்டி ரத்து செய்யப்பட்டது. தற்போது இந்த போட்டி ரிசர்வ் நாளான நேற்று (29ஆம் தேதி) நடைபெற்றது. திங்கள்கிழமை டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பந்துவீச முடிவு செய்தார்.

முதலில் பேட் செய்த குஜராத் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்தது. குஜராத் அணிக்காக சாய் சுதர்சன் அதிகபட்சமாக 96 ரன்கள் எடுத்தார். அதே நேரத்தில் விருத்திமான் சாஹா 54 ரன்கள் எடுத்தார். ஷுப்மான் கில் 39 ரன்களும், ஹர்திக் பாண்டியா ஆட்டமிழக்காமல் 21 ரன்களும் எடுத்தனர்.  இதையடுத்து மழை பெய்ததால் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 15 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. ரவீந்திர ஜடேஜா மோகித் ஷர்மாவின் கடைசி ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து திரில் வெற்றியை உறுதி செய்தார்.

சென்னை அணியில் அதிகபட்சமாக கான்வே 47 ரன்கள் எடுத்தார், ஆனால் அனைத்து பேட்ஸ்மேன்களும் சிறப்பாக பங்களித்தனர். ருதுராஜ் 26 (16) ரன்களும், கான்வே 47 (25) ரன்களும், ரஹானே 27 (13) ரன்களும், ராயுடு 19 (8) ரன்களும் எடுத்தனர். துபே 32 (21) ரன்களுடனும், ஜடேஜா 15 (6) ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.