ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் அணிக்கு எதிரான வெற்றியை அம்பதி ராயுடுவுக்கு அர்ப்பணிப்பதாக சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை அணி, குஜராத் அணியை எதிர்த்து விளையாடியது. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்பின் ஆடிய குஜராத் அணி, சாய் சுதர்சன் மற்றும் சாஹாவின் அதிரடியான அரைசதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் குவித்தது.

இதையடுத்து, சென்னை அணியின் பேட்டிங்கில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதனால் சென்னை அணிக்கு 15 ஓவர்களில் 171 ரன்கள் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. சிஎஸ்கே அணிக்கு கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில், ஜடேஜா ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து சென்னைக்கு பட்டத்தை பெற்றுத் தந்தார்.

இந்த வெற்றிக்கு சென்னை அணியின் ஒவ்வொரு வீரரும் பங்களித்துள்ளனர். ருது ராஜ், கான்வே, மிடில் ஓவர்களில் அதிரடி காட்டிய ரஹானே, மோகித் சர்மாவின் ஓவரில் ஆட்டத்தை சிஎஸ்கே பக்கம் திருப்பிய ராயுடு, ரஷித் கானின் ஓவரில் சிக்ஸர் அடித்த துபே உட்பட அனைத்து பேட்ஸ்மேன்களும் சிஎஸ்கே வெற்றிக்கு பங்களித்துள்ளனர். இதனால், இந்த வெற்றியை தனி நபரின் வெற்றியாக இல்லாமல் சென்னை அணியின் வெற்றியாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த வெற்றிக்குப் பிறகு பேசிய சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஐபிஎல் சீசன் மோசமாக இருந்ததால் இந்த சீசன் அனைவருக்கும் ஸ்பெஷல் என்றார். வழக்கம் போல ஸ்டைலிஷான கம்பேக் கொடுத்திருக்கிறோம். சேப்பாக்கத்தில் வென்றதைத் தவிர, வெளி மைதானத்தில் நடந்த போட்டிகளிலும் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். அதேபோல் அணியின் அனைத்து வீரர்களும் வெற்றிக்கு பங்களித்துள்ளனர். ரஹானே, கான்வே என பல வீரர்கள் சிறப்பாக விளையாடினர்.

அம்பாடி ராயுடுவுக்கு விளையாட போதுமான பந்துகள் கிடைக்கவில்லை. இந்த வெற்றியையும் கோப்பையையும் ராயுடுவுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். ஏனென்றால் இன்றும் சிறப்பான தொடக்கத்தை கொடுக்க நினைத்தோம். விக்கெட்டுகள் இருப்பதால் 13வது ஓவரில் வெற்றி பெறுவோம் என்று நினைத்தேன். ஆனால் கடைசி ஓவரின் கடைசி பந்தில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.