ஐபிஎல் கிரிக்கெட் தொடரை சிஎஸ்கே அணி 5வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளது..

தோனிக்கு தற்போது 41 வயதாகிறது. இதுவே அவரது கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் தோனி கோப்பையை வெல்ல வேண்டும் என பலரும் ஆசைப்பட்டனர். இந்நிலையில் இறுதிப் போட்டியில் சென்னை – குஜராத் அணிகள் நேற்று மோதியது. இந்த பரபரப்பான போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றியின் விளிம்பில் இருந்தபோது தல தோனி டக்அவுட் ஆகி வெளியே சென்றார். இது சிஎஸ்கே ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இது சிஎஸ்கேயின் வெற்றி வாய்ப்புகளை பெரிதும் பாதித்தது. இதனால் மனம் கனத்த முகத்துடன் பெவிலியன் நோக்கி நடந்தார் தோனி. அதன்பின் கடைசி ஓவரை சோகத்துடன் பார்த்தார் தோனி. குறிப்பாக மோகித் சர்மா வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது.

இந்நிலையில் சிஎஸ்கே அணி முதல் 4 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, ​​இது கடினமான பணி என்றும், தன்னால் அணிக்காக நின்று பினிஷ் செய்து ஜெயிக்க முடியாமல் போனதே என்று தோனியின் சோக முகமே சொல்லாமல் சொன்னது.

மேலும் தோனி கடைசி இரண்டு பந்துகளை பார்க்காமல் தலை குனிந்து அமர்ந்திருந்தார். பின்னர் ஐந்தாவது பந்தில் ஜடேஜா சிக்ஸர் அடிக்க, கடைசி பந்தில் ஜடேஜா பவுண்டரி அடித்து சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. சிஎஸ்கே வெற்றி பெற்றது கூட தெரியாமல் தோனி தலை குனிந்தார்.

அதன்பிறகு, அவரை மற்றவர்கள் உற்சாகமாக கட்டிப்பிடித்த பிறகே சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது தெரிந்தது. இதையடுத்து மகிழ்ச்சியில் திளைத்த தோனி, ஜடேஜாவை கட்டிப்பிடித்து கொண்டாடினார். தோனியின் முகத்தில் சிரிப்பை பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இந்தக் காட்சிகள் ஒவ்வொரு சிஎஸ்கே ரசிகனின் மனதிலும் வாழ்நாள் முழுவதும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காட்சி,வீடியோ வைரலாகி வருகிறது.

குஜராத் அணியில் சாய் சுதர்ஷன் மற்றும் விருத்திமான் சாஹா, கில் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் சென்னைக்கு 215 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மழை காரணமாக 5 ஓவர்கள் குறைக்கப்பட்டு டக் வொர்த் லூயிஸ் முறைப்படி சென்னை அணிக்கு 171 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. சென்னை அணி 15 ஓவரில் 5 விக்கெட் இழந்து 171 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. சென்னை அணியில் ஷிவம் துபே, அம்பதி ராயுடு மற்றும் டெவோன் கான்வே, ருதுராஜ் ஆகியோர் சிறப்பாக ஆடினர்..