அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான போர் ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் நாடு உள்ளுக்குள்ளேயே ஒரு மிகப்பெரிய அரசியல் அதிர்ச்சியைச் சந்தித்துள்ளது. அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஹசன் ரூஹானி மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் முகமது ஜாவத் ஸரிஃப் ஆகிய இருவர் மீதும் தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் அமெரிக்காவின் முகவர்களாகச் செயல்பட்டு நாட்டிற்குத் துரோகம் இழைத்ததாக ஈரான் நிர்வாகம் அதிரடி புகாரை முன்வைத்துள்ளது. குறிப்பாக, முன்னாள் அமைச்சர் ஜாவத் ஸரிஃப் தன்னிச்சையாக அமெரிக்காவிற்குப் போர் நிறுத்த முன்மொழிவை அனுப்பியதே இந்த மோதலுக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

இந்தச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, ஈரானின் தெருக்களில் பொதுமக்கள் திரண்டு இரு தலைவர்களையும் உடனடியாகக் கைது செய்யக் கோரி தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹமீத் ரசாய் இது தொடர்பாக நீதிமன்றத்தை அணுகி, இவர்கள் இருவரையும் சிறையில் அடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

“எங்கள் நிபந்தனைகளின் பேரிலேயே போர் நிறுத்தம் அமையும்” என்று ஈரான் அரசு பிடிவாதமாக இருக்கும் வேளையில், தங்களுக்குத் தெரியாமல் ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தலைவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பாய்ந்துள்ளதால் ஈரானில் பெரும் பதற்றம் நிலவுகிறது.