ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் புகுந்து பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலை மத்திய அரசு வன்மையாகக் கண்டித்துள்ளது. தனது சொந்த நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதாரத் தோல்விகளை மறைக்கவே, அண்டை நாடுகள் மீது பாகிஸ்தான் இது போன்ற தாக்குதல்களை முன்னெடுப்பதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறிப்பாக, புனிதமான ரமலான் மாதத்தில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனையளிப்பதாக இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் பாகிஸ்தானின் இத்தகைய நடவடிக்கைகள் பிராந்திய அமைதியைக் குலைக்கும் முயற்சி என்று விமர்சித்துள்ள மத்திய அரசு, ஆப்கானிஸ்தானின் இறையாண்மை மற்றும் எல்லை ஒருமைப்பாட்டிற்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் என்பதையும் உறுதிபடத் தெரிவித்துள்ளது.

இதனால் தனது நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினைகளைக் கையாளத் தெரியாமல், பயங்கரவாதத்தை ஒடுக்குவதாகக் கூறிக்கொண்டு அண்டை நாடுகளின் நிலப்பரப்பில் அத்துமீறுவது பாகிஸ்தானின் பழைய வாடிக்கை எனச் சாடியுள்ள இந்தியா, சர்வதேச விதிகளை மதித்து நடக்குமாறு அண்டை நாட்டை அறிவுறுத்தியுள்ளது.