தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது திமுக அரசை “ஏமாற்று மாடல்” என்று விமர்சித்த அவர், இந்த பட்ஜெட்டை அத்திப்பழத்தோடு ஒப்பிட்டுப் பேசினார். அவர் பேசியதாவது,

“கடந்த 5 ஆண்டுகளாக தமிழக மக்களை வாட்டி வதைத்து வரும் திமுக அரசு, தனது கடைசி பட்ஜெட்டையும் ஏமாற்று பட்ஜெட்டாகவே தாக்கல் செய்துள்ளது. திமுக அரசு எந்த அளவிற்கு தமிழக மக்களுக்குக் காது குத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவே நாங்கள் இன்று நூதன முறையில் எதிர்ப்பைத் தெரிவித்தோம்.”

அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தாமல் திமுக அரசு மீண்டும் ஒருமுறை ஏமாற்றியுள்ளது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அலுவலர்களுக்குத் தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. இது வெறும் “வாய்ஜாலம் நிறைந்த மேனாமினிக்கி உரை”யாக மட்டுமே உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி சாடினார்.

 மாநில அரசின் வருவாய் சுமார் 26,000 கோடி வரை குறைந்துள்ளது. இது குறித்து நிதியமைச்சர் சபையில் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையால் மாநிலத்தின் கடன் சுமை அதிகரித்துள்ளது. நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க மக்கள் மீது வரிச் சுமையை ஏற்றுவதும், கடன் வாங்குவதும் ஆரோக்கியமான நிர்வாகம் அல்ல. அத்திப்பழத்தை வெளியே பார்த்தால் அழகாக இருக்கும், ஆனால் புட்டுப் பார்த்தால் உள்ளே புழுக்கள் (சொத்தை) இருக்கும். இன்றைய பட்ஜெட்டும் அப்படித்தான் உள்ளது” என விமர்சித்தார்.

வேளாண் பட்ஜெட் என்பது ஒரு கண் துடைப்பு என்று குறிப்பிட்ட அவர், வேளாண் துறையோடு நீர்வளத்துறையை இணைத்ததைக் கேள்வி எழுப்பினார். மேலும், கறிக்கோழி வளர்க்கும் விவசாயிகளுக்கு இந்த அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்றும், ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டசபை நடக்கும் என்ற வாக்குறுதியை மீறி, 5 ஆண்டுகளில் மொத்தமே 140 நாட்கள்தான் சபையை நடத்தியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் தமிழகம் தற்போது போராட்டக்களமாக மாறியுள்ளதாகக் கூறி தனது பேட்டியை நிறைவு செய்தார்.