மதுரை அரசியலில் நீண்டகாலமாக மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட முன்னாள் துணை மேயர் எம்.பி. மன்னன், இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் அக்கட்சியில் இணைந்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரியின் தீவிர விசுவாசிகளாக இருந்த  மன்னன், இசக்கி முத்து, முபாரக், கார்த்திகேயன் உள்ளிட்டோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திமுகவிலிருந்து நீக்கப்பட்டனர். அதன் பின்னரும் அழகிரியின் ஆதரவாளர்களாகவே செயல்பட்டு வந்த இவர்களில், கார்த்திகேயன் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முன்னிலையில் இணைந்தார். இந்த நிலையில், மற்றொரு முக்கியத் தூணான முன்னாள் எம்.பி. மன்னன் இன்று அதிமுகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய  மன்னன் கூறியதாவது, திமுகவில் மக்கள் பணி செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. கலைஞர் இருந்த காலத்திலிருந்தே உட்கட்சிப் பூசல்கள் இருந்து வந்தன. 14 ஆண்டுகளுக்கும் மேலாகக் காத்திருந்தும் திமுக தலைமை உரிய ஒத்துழைப்பு வழங்கவில்லை. மதுரையில் நடக்கும் அதிகார துஷ்பிரயோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த முடிவை எடுத்துள்ளேன். வரும் தேர்தலில் 10 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற முழு மூச்சோடு உழைப்பேன் என்றார்.

மன்னனின் இணைவை வரவேற்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில் “மன்னன் மதுரையில் மிகத் தீவிரமானவர்; கொள்கை ரீதியாகப் பேசக்கூடியவர். அவரது உழைப்பைப் பார்த்தே அன்று அவருக்குத் துணை மேயர் பதவி வழங்கப்பட்டது. திமுகவின் உட்கட்சி விவகாரங்களுக்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஆனால், ‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’ என்பது போல இன்று மன்னன் அதிமுகவிற்கு வந்துள்ளார். அவர் கட்சிக்கு விசுவாசமாக இருப்பார்” என்றார். மேலும் இந்த இணைவின் மூலம் மதுரையில் அதிமுகவின் பலம் கூடும் என அக்கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.