ஐபிஎல் வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத ஒரு மெகா அதிரடி ஆட்டத்திற்கு டெல்லி அருண் ஜெட்லி மைதானம் இன்று சாட்சியாக நின்றது.
டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்ணயித்த 265 ரன்கள் என்ற இமாலய இலக்கை, பஞ்சாப் கிங்ஸ் அணி 18.5 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது. முன்னதாக 2024-ல் கொல்கத்தா அணிக்கு எதிராக 262 ரன்களைத் துரத்திப் பிடித்த தனது சொந்த சாதனையைத் தானே முறியடித்து, “சேஸிங்கில் நாங்கள் தான் கிங்” என்பதை பஞ்சாப் மீண்டும் நிரூபித்துள்ளது.
டெல்லி அணியில் கே.எல். ராகுல் 152 ரன்கள் குவித்து மலைக்க வைத்த போதிலும், பஞ்சாப் வீரர்களின் ஒருங்கிணைந்த அதிரடி ஆட்டத்தால் டெல்லி அணி 264 ரன்கள் எடுத்தும் தோல்வியைத் தழுவியது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங் (26 பந்துகளில் 76) மற்றும் பிரியன்ஷ் ஆர்யா ஆகியோர் முதல் விக்கெட்டிற்கு வெறும் 6.5 ஓவர்களில் 126 ரன்கள் குவித்து வெற்றிக்கான அடித்தளத்தை அமைத்தனர். ஒரு கட்டத்தில் விக்கெட்டுகள் சரிந்து தடுமாற்றம் ஏற்பட்டாலும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் 7 சிக்சர்களுடன் 71 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
சஷாங்க் சிங்கின் ஒத்துழைப்போடு 8 பந்துகள் மீதமிருக்கையிலேயே பஞ்சாப் இந்த அசாத்திய இலக்கை எட்டிப் பிடித்தது. 264 ரன்கள் எடுத்தும் ஒரு அணி தோற்பது ஐபிஎல் வரலாற்றில் இதுவே முதல் முறை என்பதால், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் பஞ்சாப் அணியின் இந்த இமாலய வெற்றியைக் கண்டு மிரண்டு போயுள்ளது.
