கடந்த ஜனவரி 18-ம் தேதி, வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 30 வயது இளைஞர் ரித்தேஷ் ராகேஷ் ஏரன்கர், மின்சார ரயிலில் பயணம் செய்தபோது ஒரு கொடூரமான விபத்தைச் சந்தித்துள்ளார். இரவு 11:45 மணியளவில் அம்பர்நாத் நிலையம் அருகே ரயில் சென்றுகொண்டிருந்தபோது, அருகில் நின்றிருந்த கைலாஷ் பால் கிருஷ்ணா என்ற நபர், ரித்தேஷின் செல்போனைத் திருடிவிட்டு ஓட முயன்றுள்ளார். தனது செல்போனைப் பறிக்க முயன்ற திருடனைத் தடுக்க ரித்தேஷ் போராடியபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், ஓடும் ரயிலில் இருந்து அவர் கீழே தள்ளப்பட்டார். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ரித்தேஷின் உயிரைக் காப்பாற்ற, மருத்துவர்கள் அவரது இடது காலை அகற்ற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.
ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ரித்தேஷ், இப்போது மருத்துவமனை படுக்கையில் தனது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார். “திருடனைத் துரத்தும்போது என் கால் போகும் என்று நான் நினைக்கவில்லை, அந்த நேரத்தில் செல்போனைப் மீட்க வேண்டும் என்ற வேகம் மட்டுமே என்னிடம் இருந்தது” என்று அவர் கண்ணீருடன் கூறியுள்ளார். காவல்துறையினர் அந்தத் திருடனைக் கைது செய்துள்ள நிலையில், தனக்குச் சட்டப்படி முழு நீதி கிடைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஒரு சிறிய செல்போன் திருட்டு, ஒரு இளைஞனின் கனவுகளையும் அவனது எதிர்காலத்தையும் இப்படிச் சிதைத்திருப்பது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
