தெலுங்கானா மாநிலத்தில், கஞ்சா விற்பனை வழக்கில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த கணவனை, அவரது மனைவியே கூலிப்படை வைத்து காரில் அழைத்துச் சென்று கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெத்தரவிடு பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் லாலு ஸ்ரீனு, கஞ்சா விற்பனை செய்ததாகக் கைது செய்யப்பட்டு ஓங்கோல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
மேலும் அவர் சிறையில் இருந்தபோது, அவரது மனைவி ஜான்சிக்கும், டிரைவர் சூர்ய நாராயணா என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. சிறையில் தன்னைச் சந்திக்க வந்த மனைவியை லாலு ஸ்ரீனு கொலை மிரட்டல் விடுத்ததால், அவர் வெளியே வருவதற்கு முன்பே அவரைத் தீர்த்துக்கட்ட ஜான்சி திட்டமிட்டார். இதற்காக குண்டூரைச் சேர்ந்த கூலிப்படையினருக்கு 2 லட்சம் ரூபாய் பேசி, ஒரு லட்சத்தை முன்பணமாக வழங்கியுள்ளார்.
இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு லாலு ஸ்ரீனு ஜாமீனில் வெளிவந்தபோது, அவரை அழைத்துச் செல்வதற்காக ஜான்சி தனது தம்பியுடன் காரில் சிறை வாசலுக்குச் சென்றுள்ளார். வழியில் இயற்கை உபாதை கழிக்க லாலு ஸ்ரீனு காரை விட்டு இறங்கியபோது, ஜான்சியும் அவரது தம்பியும் சேர்ந்து அவர் கண்ணில் மிளகாய்பொடியைத் தூவினர்.
இந்நிலையில் பின் தொடர்ந்து வந்த கூலிப்படையினர் உதவியுடன், ஜான்சி தனது கணவரை கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொலை செய்தார். இச்சம்பவம் குறித்து ஜான்சி மற்றும் அவரது தம்பி போலீசில் சரணடைந்த நிலையில், தலைமறைவாக உள்ள கள்ளக்காதலன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
