சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ எடுத்து பிரபலமாவதற்காக, அதிவேகமாக வந்த வந்தே பாரத் ரயிலை தண்டவாளத்தில் மரக்கட்டைகளை வைத்து நிறுத்திய இளைஞர்களின் செயல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தண்டவாளத்தில் பெரிய மரக்கட்டைகளை அடுக்கி வைத்து, ரயில் நின்றவுடன் “வந்தே பாரத் ரயிலையே நிறுத்திவிட்டோம் என அந்த இளைஞர்கள் சிரித்துப் பேசும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 

இதனைப் பார்த்த ரயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் பயணிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். வெறும் சில நொடிகள் ஓடும் காணொளிக்காக, நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைப் பணயம் வைத்து இத்தகைய அபாயகரமான செயலில் ஈடுபட்டது ஒரு விளையாட்டல்ல, அது மிகப்பெரிய கிரிமினல் குற்றம் எனச் சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ரயில்வே சட்டத்தின்படி, ரயிலின் பயணத்திற்கு இடையூறு விளைவிப்பதும், தண்டவாளத்தில் பொருட்களை வைப்பதும் கடுமையான தண்டனைக்குரிய குற்றங்களாகும். ரயில்வே சட்டம் 1989-ன் படி, இத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ஆயுள் தண்டனை கூட விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சகத்திற்குப் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். சமூக வலைதளப் மோகத்தால் இளைஞர்கள் தடம் மாறிச் செல்வது, பொதுச் சொத்துகளுக்கும் உயிர்களுக்கும் எத்தகைய அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு கசப்பான உதாரணமாக அமைந்துள்ளது.