ஓடும் ரயிலில் ஜன்னல் வழியாகப் பயணிகளின் கைபேசியைப் பறிக்க முயன்ற திருடனை, பெண் பயணிகள் ரயிலுக்குள் இழுத்துப் போட்டு தர்ம அடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தின் வழியாகச் சென்றுகொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ரயில் நிலையம் ஒன்றிலிருந்து புறப்பட்டு மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தபோது, தண்டவாளத்தின் ஓரம் பதுங்கியிருந்த மர்ம நபர் ஒருவர், ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த பெண்ணின் கைபேசியைப் பறிக்க மின்னல் வேகத்தில் முயன்றார்.
திருடன் கைபேசியைப் பிடுங்கிய அடுத்த நொடி, சற்றும் எதிர்பாராத விதமாக அந்தப் பெண் திருடனின் கையைத் தளராமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். இதைப் பார்த்த அருகில் இருந்த மற்ற பெண் பயணிகளும் உடனடியாகச் செயல்பட்டு, திருடனின் மற்றொரு கையையும் பிடித்து ரயிலுக்குள் இழுக்க முயன்றனர்.
THIEF TRIES STEALING PHONE THROUGH TRAIN WINDOW, WOMEN PULL HIM INSIDE AND TEACH LESSON INSTANTLY pic.twitter.com/glcQatC1gU
— Ghar Ke Kalesh (@gharkekalesh) April 19, 2026
ரயில் வேகம் எடுக்கத் தொடங்கிய நிலையில், திருடன் பயத்தில் அலறினான். ஆனால் விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருந்த பெண்கள், அவனை ஜன்னல் வழியாகவே ரயிலின் உட்பகுதிக்கு இழுத்து நிலைநிறுத்தினர். இனிமேல் இதுபோல் செய்வாயா?” என்று கேட்டபடி, அங்கிருந்த பெண்கள் அந்த நபருக்கு அங்கேயே உடனடி ‘பாடம்’ புகட்டினர். அடுத்த ரயில் நிலையம் வரும் வரை அந்த நபர் பெண்களின் பிடியிலேயே இருந்தார். பின்னர் அவர் ரயில்வே காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பொதுவாக இதுபோன்ற சமயங்களில் பயணிகள் பதற்றமடைந்து திருடனைத் தப்பவிடுவது வழக்கம். ஆனால், ஆபத்தை உணராமல் துணிச்சலுடன் செயல்பட்டுத் திருடனைப் பிடித்த அந்தப் பெண்களின் தைரியத்தைப் பயணிகள் மற்றும் சமூக வலைதளவாசிகள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். இச்சம்பவம் குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
