தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) ஆதரவு மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் தொல். திருமாவளவனை, தவெக அமைச்சர்கள் குழுவினர் நேரில் சந்தித்து முறைப்படி அழைப்பு விடுத்துள்ளனர். சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் இந்த முக்கியச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
முன்னதாக, தவெக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் மற்றும் தோழமைக் கட்சிகளுக்கும் இக்கூட்டத்தில் பங்கேற்பதற்கான அழைப்பு ஏற்கனவே விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. முதல்கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று முடிந்து இரண்டு மாதங்கள் மட்டுமே ஆன நிலையில், தற்போது அடுத்தகட்ட ஆலோசனைக் கூட்டம் கூட்டப்படவுள்ளது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.
வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளிடையே ஒருங்கிணைப்பை மேலும் பலப்படுத்துவது மற்றும் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவெக அமைச்சர்கள் நேரில் சென்று திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்துள்ள நிகழ்வு, தமிழக அரசியல் களத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
