ஊத்தங்கரை தொகுதி தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) சட்டமன்ற உறுப்பினர் என்.இளையராஜாவிடம் குதிரை பேரம் பேசியதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை ஏற்கனவே விசாரித்த உயர் நீதிமன்றம், குதிரை பேர வழக்கு தொடர்பான ஒட்டுமொத்த விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இதேபோல், செந்தில் பாலாஜி உள்ளிட்ட பலர் மீது டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரமேஷ் என்பவருக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் விசாரணைக்கு மட்டும் உயர் நீதிமன்றம் ஏற்கனவே இடைக்கால தடை விதித்திருந்தது.

இந்நிலையில், இந்த இரு வழக்குகளும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

விசாரணையின் போது, உயர் நீதிமன்றம் பிறப்பித்த இந்த இடைக்கால தடைகளை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. எனினும், உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இதுவரை எந்தவித தடையும் விதிக்கவில்லை என்ற விவரமும் நீதிபதிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இரு வழக்குகளிலும் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடைகளை மேலும் நீட்டித்து உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்குகளின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் ஆணையிட்டனர்.