அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் மூத்த தலைவரான கே.ஏ. செங்கோட்டையன், கட்சியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையப் போவதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
சமீபத்தில், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று செங்கோட்டையன் வலியுறுத்தியிருந்தார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார். இதனையடுத்து, வரும் 27 ஆம் தேதி செங்கோட்டையன், நடிகர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணையலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பில் பல்வேறு அரசியல் விஷயங்களைப் பற்றி கருத்து தெரிவித்தார். கோவையில் முதல்வர் திறந்து வைத்த செம்மொழி பூங்கா நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாததற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார். “இத்தகைய செயல்களை பாஜக செய்திருந்தால் எவ்வளவு விமர்சனை வந்திருக்கும்? தமிழை வைத்து மக்களை எத்தனை நாள் ஏமாற்றப் போகிறார்கள்?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், “அன்பில் மகேஷ் பாடங்களைப் பார்க்கிறாரோ இல்லையோ, உதயநிதி பாடல் எழுதுகிறார்” என்றும் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, செங்கோட்டையன் தவெகவில் இணைகிறாரா என்ற கேள்விக்கு தமிழிசை பதிலளிக்கையில், “அண்ணன் செங்கோட்டையன் என்ன செய்கிறார் என்பதைப் பார்ப்பது எங்கள் வேலையல்ல. ஜார்ஜ் கோட்டையைப் பிடிப்பதே எங்கள் இலக்கு; செங்கோட்டையனைப் பிடிப்பது அல்ல” என பதிலளித்தார்.
மேலும் செங்கோட்டையன் மற்றும் பன்னீர் செல்வம் இதுவரை இந்த இணைவு தொடர்பான செய்தியை மறுக்காத நிலையில், தமிழிசையின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் புதிய வியூகங்களை கிளப்பியுள்ளது.
