தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் இன்று சென்னை வந்துள்ளார். அவர் முகப்பேர் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க இருந்த நிலையில், அந்தப் பகுதி முழுவதும் ‘காங்கிரஸ் உரிமை மீட்பு குழு’ என்ற பெயரில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின. அந்தப் போஸ்டர்களில் “சுயமரியாதை இழந்து கூட்டணி வேண்டாம்” என அதிரடியாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் இரண்டாம் தரமாக நடத்தப்படுவதாக ஒரு தரப்பு நிர்வாகிகள் கருதுவதையே இந்த போஸ்டர்கள் பிரதிபலிப்பதாகக் கருதப்படுகிறது.
கே.சி. வேணுகோபால் அந்த இடத்திற்கு வருவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பே, சர்ச்சைக்குரிய அந்தப் போஸ்டர்கள் அனைத்தும் மர்ம நபர்களால் கிழிக்கப்பட்டன. இது போஸ்டர் ஒட்டிய தரப்பினருக்கும், அதைக் கிழித்தவர்களுக்கும் இடையே மோதல் போக்கை உருவாக்கியுள்ளது. “கூட்டணிக்குள் பேசி முடிக்கப்படும்” எனத் தலைவர்கள் சொன்னாலும், அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் “சுயமரியாதை” குறித்த குமுறல்கள் போஸ்டர்களாக வெடித்திருப்பது காங்கிரஸ் மேலிடத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
