டெல்லியில் சமீபத்தில் நடந்த உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது, தலைமை நீதிபதி சூர்யா காந்த், “வேலையில்லாத இளைஞர்கள் சிலர் மீடியா, சோசியல் மீடியா மற்றும் தகவல் அறியும் உரிமை சட்ட (RTI) ஆர்வலர்களாக மாறி, கரப்பான் பூச்சிகள் மற்றும் ஒட்டுண்ணிகள் போல ஒட்டுமொத்த சிஸ்டத்தையும் தாக்குகிறார்கள்” என்று ஒரு கருத்தைக் கூறியிருந்தார்.
இந்த விவகாரம் இணையத்தில் காட்டுத்தீயாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இளைஞர்கள் இதற்கு டிஜிட்டல் முறையில் ஒரு வித்தியாசமான எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அபிஜீத் திப்கே என்ற இளைஞர், நீதிபதியின் இந்த ‘கரப்பான் பூச்சி’ வார்த்தையை மையமாக வைத்து, கிண்டலாக ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (Cockroach Janata Party – CJP) என்ற புதிய அரசியல் கட்சியை ஆன்லைனில் ஆரம்பித்துள்ளார்.
“நீங்கள் சோம்பேறியா, வேலையில்லாதவரா, எப்போதும் ஆன்லைனில் ரகளை செய்பவரா? அப்படியென்றால் நீங்கள் எங்கள் கட்சியில் சேரலாம்” என நெட்டிசன்கள் இதைக் கொண்டாடத் தொடங்கினர். வெறும் இரண்டே நாட்களில் இந்த ‘ட்ரோல்’ கட்சியில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்களான மஹுவா மொய்த்ரா, கீர்த்தி ஆசாத் போன்ற பிரபல அரசியல்வாதிகளும் கூட ஜாலியாக இந்த ட்ரெண்டில் இணைந்து எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் தங்களை இந்த கட்சியின் உறுப்பினர்களாக அறிவித்துக் கொண்டுள்ளனர்.
