கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் நிம்பேமரதஹள்ளி கிராமத்தில், சொந்த மகளையே தந்தை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியான மேகனா, தனது தாயின் உறவினரான எலக்ட்ரீஷியன் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த காதலுக்கு தாயார் நிர்மலா ஆதரவு தெரிவித்த நிலையில், தந்தை திம்மராயப்பா கடும் எதிர்ப்பு தெரிவித்து அடிக்கடி வீட்டில் சண்டை போட்டு வந்துள்ளார். கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி, மேகனாவை மட்டும் தனியாக விளைநிலத்திற்கு அழைத்துச் சென்ற திம்மராயப்பா, அங்கு அவளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீரென கழுத்தை நெரித்துள்ளார். சிறுமி மயங்கி விழுந்ததும் அவளை அங்கிருந்த விவசாயக் கிணற்றில் தூக்கி வீசி, உடல் மேலே மிதந்துவிடக் கூடாது என்பதற்காக பெரிய கற்களைக் கொண்டு தாக்கியுள்ளார்.

பின்னர் அன்று மாலையே கிணற்றில் இருந்து உடலை வெளியே எடுத்து, யாருக்கும் தெரியாமல் அருகில் இருந்த ஒரு வறண்ட ஏரிப் பகுதியில் பள்ளம் தோண்டி கொடூரமாகப் புதைத்துள்ளார்.

மறுநாள் ஏதும் தெரியாதது போல மனைவியுடன் சேர்ந்து, மகள் காணாமல் போய்விட்டதாக போலீசில் திம்மராயப்பா நாடகமாடி புகார் அளித்துள்ளார். ஆனால் அடுத்த சில நாட்களில், தானும் மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில் அவர் திடீரென தலைமறைவானார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வந்த நிலையில், கிராமத்திற்கு அருகில் உள்ள தனது நண்பரை ரகசியமாகச் சந்திக்க வந்தபோது திம்மராயப்பாவை மடக்கிப் பிடித்தனர்.

போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சொந்த மகளையே கிணற்றில் தள்ளிக் கொன்று புதைத்த கொடூரத்தை அவர் ஒப்புக்கொண்டார். தப்பியோட முயன்ற அந்த கொடூர தந்தையை தற்போது போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.