நாகினி’ சீரியல் மூலம் தென்னிந்திய ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் நடிகை மௌனி ராய். சமீபத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ‘விஸ்வம்பரா’ படத்தில் சிறப்புப் பாடலுக்கு நடனமாடியுள்ள இவர், தமக்கு நேர்ந்த ஒரு கசப்பான சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
அரியானா மாநிலம் கர்னால் பகுதியில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் மௌனி ராய் கலந்துகொண்டார். அப்போது அங்கு திரண்டிருந்த கும்பல் அவரிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மௌனி ராய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
“கர்னால் நிகழ்ச்சியில் நான் மேடைக்குச் சென்றபோது, அங்கிருந்த சிலர் புகைப்படம் எடுப்பதாகக் கூறிக்கொண்டு எனது இடுப்பில் கை வைத்தனர். உடனே நான் கையை எடுக்கும்படி கூறினேன். இது அங்கிருந்தவர்களுக்குப் பிடிக்கவில்லை. தொடர்ந்து மேடையைச் சுற்றியிருந்தவர்கள் ஆபாசமான வார்த்தைகளைப் பேசியதுடன், அருவருப்பான கை சைகைகளையும் காட்டினர். முதலில் அமைதியாகச் சைகை காட்டி அவர்களை எச்சரித்தேன்.”
“கூட்டத்தினரின் அநாகரிகச் செயலால் மனமுடைந்து நிகழ்ச்சியின் பாதியிலேயே வெளியேற முயன்றேன். பிறகு ஒருவாறாக மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு நிகழ்ச்சியை முடித்துக் கொடுத்தேன். ஆனால், அதன் பிறகும் அந்த நபர்கள் அத்துமீறுவதை நிறுத்தவில்லை. அங்கிருந்தவர்கள் எவரும் அவர்களைத் தடுத்து அப்புறப்படுத்த முன்வரவில்லை என்பதுதான் வருத்தமளிக்கிறது.”
“என்னைப் போன்ற ஒருவருக்கே இந்த நிலை என்றால், திரைத்துறைக்கு புதிதாக வரும் பெண்களின் பாதுகாப்பை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது. ஒரு கலைஞராக நேர்மையான உழைப்பின் மூலம் முன்னுக்கு வர நினைக்கிறோம். எங்களை அவமானப்படுத்தும் இத்தகைய நபர்களுக்கு, அவர்களது வீட்டில் உள்ள பெண் உறவினர்களுக்கு இது போன்ற நிலை ஏற்பட்டால் என்ன செய்வார்கள் என்று கேட்கத் தோன்றுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுபோன்ற அத்துமீறல்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என அவர் பதிவிட்டுள்ளார்.
மௌனி ராயின் இந்த ஆதங்கமான பதிவு தற்போது இணையதளங்களில் வைரலாகி வருவதோடு, ரசிகர்களிடையே பெரும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.
