சிங்கப்பூரை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அந்த நபரின் மனைவி கணவரை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். இந்த தம்பதியின் மகனுக்கு 23ஆம் தேதி பிறந்தநாள் வருகிறது. இதனால் மகனின் பிறந்த நாளை கொண்டாட அந்த நபர் இந்தியாவிற்கு வந்துள்ளார்.

அந்த நபர் குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிடுமாறு நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நீங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு சிங்கப்பூரில் கணவருடன் வாழ்வதில் என்ன பிரச்சனை என அந்த பெண்ணிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அந்த பெண் கணவரின் செயல்பாடுகளை பார்த்தால் அவருடன் சிங்கப்பூரில் வாழ்வது மிக கடினம். வாழ்வாதாரத்திற்கு வேலை முக்கியம் என கூறினார். அதற்கு நீதிபதிகள் வேலை கிடைக்கிறதோ, இல்லையோ நீங்கள் அங்கு சென்றால் உங்களை அவர் பராமரிக்க வேண்டும்.

தேவைப்பட்டால் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் பணம் டெபாசிட் செய்யுமாறு கணவரிடம் கேட்கலாம் என கூறியுள்ளனர். அதற்கு அந்த பெண் நான் யாரையும் சார்ந்திருக்க விரும்பவில்லை என கூறினார். இதனை கேட்ட நீதிபதிகள் அந்த பெண்ணுக்கு அறிவுரை கூறியுள்ளனர்.

அதாவது, எங்களை பழைய ஆள் என்று நினைத்தாலும் பரவாயில்லை. திருமண உறவில் கணவரோ மனைவியோ தாங்கள் அடுத்தவரை சார்ந்து இருக்க விரும்பவில்லை என்று சொல்வதில் சாத்தியமே கிடையாது. யாராவது சுதந்திரமாக இருக்க விரும்பினால் அவர்கள் திருமணமே செய்திருக்கக் கூடாது.

திருமணம் என்பது இரண்டு ஆன்மாக்கள் ஒன்று சேர்வது. அப்படி இருக்கும்போது நீங்கள் எப்படி சுதந்திரமாக இருக்க முடியும்? நீங்கள் இருவரும் ஒன்று சேர்ந்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். குழந்தைகள் சிறிய வயதில் உள்ளனர். அவர்கள் உடைந்து குடும்பத்தை பார்க்க வேண்டுமா? அவர்கள் என்ன தவறு செய்தார்கள்? என நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து சிந்திப்பதாக அந்த பெண் கூறியுள்ளார்.