தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய முதல் நாளிலேயே, கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் ஒரு வினோதமான சம்பவம் அரங்கேறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தத் தொகுதியில் போட்டியிட மனுத் தாக்கல் செய்ய வந்த 68 வயதான சுயேச்சை வேட்பாளர் நூர் முகமது, வழக்கமான வேட்பாளர்களைப் போல ஆதரவாளர்களுடன் வராமல், நேராகச் சுடுகாட்டிற்குச் சென்று அங்கிருந்து இறுதிச்சடங்கிற்குப் பயன்படுத்தப்படும் மண்பானையுடன் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளார்.

அலுவலகத்திற்கு 100 மீட்டர் தொலைவிலேயே அந்தப் பானையை உடைத்துத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்த அவர், பின்னர் தேர்தல் அதிகாரியிடம் தனது மனுவைத் தாக்கல் செய்தார். “மக்களே! ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள். எல்லோருக்கும் இறுதிச்சடங்கு ஒருமுறை தான் சுடுகாட்டில் நடக்கும். ஆனால் ஓட்டுக்கு நீங்கள் பணம் வாங்கினால், அது உங்கள் வீட்டிலேயே நடக்கும் என்பதற்கு அடையாளமாகத்தான் இந்த மண்பானையுடன் வந்தேன்” என்று அவர் ஆவேசமாகக் கூறினார்.

இதுவரை ஜனாதிபதி தேர்தல் உட்பட 48 முறை போட்டியிட்டுள்ள நூர் முகமது, இதற்கு முன்பு சவப்பெட்டி, ஏர்கலப்பை எனப் பல வினோத வடிவங்களில் வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“கல்வியும் மருத்துவமும் இலவசமாக கிடைத்தால் இந்தியா வல்லரசாகும்” என்று முழங்கிய நூர் முகமதுவின் இந்த அதிரடிச் செயல் கோவை தேர்தல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.