தமிழக அரசியலில் தவெக ஆட்சி அமைக்க உள்ள நிலையில், காரைக்குடி தொகுதியில் ‘மெகா’ வெற்றியைப் பதிவு செய்த டி.கே.பிரபுவுக்கு புதிய அமைச்சரவையில் முக்கிய இடம் கிடைக்கப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சுமார் 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்த பல் மருத்துவர் பிரபுவுக்கு, அவரது மருத்துவப் பின்னணி மற்றும் தொகுதி செல்வாக்கைக் கருத்தில் கொண்டு சுகாதாரத்துறை அல்லது பால்வளத்துறை இலாகா ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
காரைக்குடி தேர்தல் களத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைக் குவித்து, காங்கிரஸ் மற்றும் அமமுக வேட்பாளர்களைப் பின்னுக்குத் தள்ளிய பிரபுவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவது தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து முதலமைச்சராகப் பதவியேற்கும் விஜய்யின் இந்த முதல் அமைச்சரவையில், படித்த இளைஞரான டாக்டர் பிரபுவுக்குப் பிரதிநிதித்துவம் கிடைப்பது காரைக்குடி தொகுதிக்கும் ஒரு புதிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.
