சிவகாசியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற கருணாஸ், செய்தியாளர்களிடம் மனம் திறந்து பேசினார். அப்போது அவர், “திமுக கூட்டணியில் எங்களது முக்குலத்தோர் புலிப்படைக்கு சீட் கொடுத்தால், என்னைத் தவிர போட்டியிட வேறு ஆள் இல்லை.

சீட் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும், மதவாத பாஜகவை தமிழகத்திற்குள் நுழைய விடாமல் தடுக்க முதல்வர் ஸ்டாலினுக்காகத் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வேன்” என அதிரடியாகத் தெரிவித்தார்.

மேலும் நடிகர் விஜய் குறித்துப் பேசிய அவர், விஜய்க்கு ஓட்டுப் போடவில்லை என்றால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு விஷம் வைத்துக் கொன்று விடுவோம் என அவரது பெண் ரசிகர்கள் சொல்வதைக் கேட்கும்போது பயமாக இருக்கிறது என்றும், இதனால் தமிழக மக்கள் தொகை குறைந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படுவதாகவும் கிண்டலாகவும் கவலையாகவும் சாடினார்.

“திமுக என்பது எதற்கும் அஞ்சாத இயக்கம், பிரதமர் மோடியையே சித்தாந்த ரீதியாக எதிர்க்கும் முதல்வர் ஸ்டாலின் கைகளை வலுப்படுத்துவதே எங்களது நோக்கம்” என அவர் திட்டவட்டமாகக் கூறினார்.