தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று மாலை 4 மணியளவில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். காணொலி வாயிலாக நடைபெற்ற இந்தச் சந்திப்பில், கட்சியின் தேர்தல் பணிகள் மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்து முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். குறிப்பாக, “இறுதி வேட்பாளர் பட்டியல் தயாராகி வருவதாகவும், தகுதியானவர்களுக்கே வாய்ப்பு வழங்கப்படும்” என்றும் தெரிவித்த விஜய், “பட்டியலில் பெயர் இடம்பெறாத நிர்வாகிகள் யாரும் வருத்தப்படாமல், கட்சியின் வெற்றிக்காகத் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று அன்புக்கட்டளை இட்டுள்ளார்.
மேலும், தேர்தல் பணிகளை அடிமட்ட அளவில் வலுப்படுத்த வேண்டும் என வலியுறுத்திய அவர், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தலா 5 தேர்தல் பணிமனைகளை உடனடியாக அமைக்க வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். “நமது இலக்கு வெற்றி மட்டுமே, இதில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை” என்று அவர் பேசியது நிர்வாகிகளிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், விஜய்யின் இந்தத் திட்டமிட்ட காய்நகர்த்தல்கள் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி வட்டாரங்களில் “த.வெ.க-வின் அடுத்த மூவ் என்ன?” என்ற எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
