உத்தரப் பிரதேசம் உன்னாவ் மாவட்டத்தில் மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் நடந்த ஒரு சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவன் கோவிலில் சேவை செய்யும் தீரஜ் என்ற நபர், அல் ஹபீப் உணவகத்தில் இருந்து ஆன்லைனில் ஆர்டர் செய்த பனீர் கறி மற்றும் ரொட்டியில் இறைச்சித் துண்டுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

சம்பவத்தை உடனடியாக வீடியோவாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்த அவர், “இது என் மத நம்பிக்கைகளுக்கு எதிரானது, என் உணர்வுகளை புண்படுத்துகிறது” என்று குற்றம்சாட்டினார். இந்த வீடியோ சில மணி நேரங்களில் வைரலாகி, மக்களிடையே கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

“>

 

தகவலின்படி, இந்த சம்பவம் சதார் கோட்வாலி போலீஸ் எல்லைக்குட்பட்ட மகர்வாரா பகுதியில் நடைபெற்றது. தினமும் கோவிலில் சேவை செய்வது வழக்கமாகக் கொண்டிருக்கும் தீரஜ், வழக்கம்போல் பனீர் கறி ஆர்டர் செய்திருந்தார். ஆனால் பார்சலைத் திறந்தபோது, அதில் கோழி இறைச்சியைப் போல் இருந்த துண்டுகள் இருப்பதை கண்டு அவர் திகைத்துப் போனார்.

“சைவ உணவில் அசைவம் கலந்து வழங்குவது, மதத்தை அவமதிக்கும் செயல்” என்று கூறிய அவர், உணவக உரிமையாளருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிலையில், தீரஜ் அளித்த புகாரின் அடிப்படையில், சதார் கோட்வாலி காவல் துறையினர் விசாரணை தொடங்கியுள்ளனர். “பெறப்பட்ட புகாரின் பேரில் சம்பவம் தொடர்பான அனைத்து ஆதாரங்களும் சேகரிக்கப்படுகின்றன, விசாரணை முடிந்ததும் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், சமீபத்தில் நாட்டின் பல இடங்களில் சைவ உணவில் அசைவம் கலந்து கிடைத்தது குறித்த புகார்களுடன் இணைந்து, மீண்டும் சுகாதார மற்றும் மத உணர்வுகளைப் புண்படுத்தும் பிரச்சினையை தலைப்புச் செய்தியாக்கியுள்ளது.